யப்பான் மொழியில் தேர்ச்சியில்லாத 1000 பேருக்கு யப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குதல்- தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள் யப்பானிடம் வேண்டுகோள்.
யப்பான் மொழியில் தேர்ச்சியில்லாத பாடசாலையிலிருந்து வெளியேறிய ஆயிரம் பேருக்கு யப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள், இலங்கையிலுள்ள யப்பான் தூதரகத்திற்குப் பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட தூதுவர் திரு.கற்சூகி கொராறா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கான யப்பான் தூதரகத்தின் சிரேஷ்ட தூதுவர் திரு.கற்சூகி கொராறா அவர்களும், சிரேஷ்ட யப்பான் இராஜதந்திரிகள் தூதுவர் குழாமொன்றும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவினைப் பலப்படுத்துவதற்கும், யப்பானில் இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பினை வழங்குவது பற்றியும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களை 2022 மே 26 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
தற்போது யப்பான் மொழி கற்ற இளைஞர்களுக்கு அதிகளவு தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதனால், எதிர்காலத்தில் மொழித் தேர்ச்சியற்ற இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குமாறு அமைச்சர் யப்பானிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி, பாடசாலையிலிருந்து வெளியேறிய ஆயிரம் பேருக்கு யப்பானுக்குச் சென்று, அங்கு மொழியினைக் கற்று, வேலையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு சாதகமாக பதிலளிக்கையில், இலங்கைக்கு அதிக தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக யப்பான் பணியாற்றுவதாக சிரேஷ்ட தூதுவர் தெரிவித்திருந்தார். யப்பான், இலங்கையர்களுக்கு, விசேடமாக சிவிலியர் (தாதியர்) துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், யப்பானில் வயது வந்தவர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதனால் இந்தத் துறையில் தொழில் வாய்ப்புகள் பெருகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கை எப்போதும் யப்பானின் நட்பு நாடாக இருப்பதாக சிரேஷ்ட தூதுவர் தெரிவித்திருந்தார். சன் பிரான்சிகோ மாநாட்டில் முன்னாள் சனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் யப்பான் சார்பாக தர்ம போதனையிலுள்ள “நகிவெரன-வெரனி” என்பதைக் குறிப்பிட்டமை பற்றியும் நினைவுபடுத்தியிருந்தார்.
வெளிநாட்டு வேலை தேடும் இளம் நபர்களுக்கு யப்பான் மொழித் தேர்ச்சி வழங்குவதும், யப்பானில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதும், அதேபோன்று ‘ஜைக்கா’ மூலம் இலங்கைக்கு யப்பான் மொழி ஆசிரியர்களை அனுப்பும் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன.