புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

வேலைத்தல விபத்துக்களுக்கான நட்டஈட்டு 2 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

ஊடகங்கள்

வேலைத்தல விபத்துக்களினால் ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர அங்கவீனம் ஏற்பட்டால் தனியார் துறை ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈட்டை இரண்டு மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார். இதன்படி, வேலைத்தல விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கான நட்டஈட்டை 550,000 ரூபாவிலிருந்து 2,000,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும்.

 

வேலையாட்கள் , தொழில் புரிகையில் காயமடைந்தால் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடு 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க  வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டமாகும்.. விபத்துக்களில் காயமடைந்த வேலையாட்களுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகைகள் 2005 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட போதிலும், 16 வருடங்களுக்கு முன்னர் குறித்துரைக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகைகள் மற்றும் தற்போதைய தேவைப்பாடுகளுக்கு பொருந்தும் வகையில் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய ஏற்பாடுகள் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்காக புதிய திருத்தச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று  அமைச்சர் வலியுறுத்தினார்.​

 

இந்த இலக்கை நோக்கி உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையால் அளிக்கப்பட்ட அதிகாரம் நாட்டின் உழைக்கும் அணியால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்கதொரு வெற்றியாகுமென்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இத்திருத்தச் சட்டம், “சுபீட்சத்தின்நோக்கு” என்ற கொள்கைக் கூற்றில் தரப்பட்டிருக்கின்ற  “நாட்டிற்காக உழைக்கும் கலாச்சாரம்” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துகின்ற தனியார் துறை பணியாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். “பணியார் களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க  வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தை” திருத்துவதற்கு கொள்கைக்கூற்று உறுதியளித்துள்ளது.

 

தொழில் புரிகையில் அல்லது தொழில் காரணமாக பணியாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு மேலதிகமாக, வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்கு பயணிக்கும்போதும், பணியிடத்திலிருந்து வசிக்கும் இடத்திற்கு பயணிக்கும்போதும் ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு பெறக்கூடிய வகையிலான சட்ட ஏற்பாடுகளும் திருத்த சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மரணச்சடங்குச் செலவுகளுக்கு நட்டஈடாக வைப்பிலிடப்பட்ட பணத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தொகையை வழங்குவதற்கு திருத்தச் சட்டமூலத்தினூடாக தொழில் நட்டஈட்டு ஆணையாளருக்கு அதிகாரமளிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று, நீதிச் சேவைகள் ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்ட பதிவாளர் பதவியொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், பிஸ்கால் ஊடாக ஆணையாளர் நட்டஈட்டை மீளப்பெறுவதற்கு அனுமதிக்கச்செய்கின்ற வகையில் நடைமுறைகளைத் திருத்துவதன் மூலம் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் மீளப்பெறும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கும் தற்போதுள்ள நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்குமான ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

நாளாந்த மற்றும் துண்டு வீத அடிப்படையில் சம்பளம் பெறுகின்ற வேலையாட்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்ட ஈட்டைக் கணித்தல், நட்டஈடு செலுத்துவதில் ஏற்புடைய ஆகக் குறைந்த மற்றும் அதிகபட்ச மாதாந்த சம்பளத்தை நிர்ணயித்தல், மரணமடையும் போது வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை மற்றும் நிரந்தர, முழுமையான அல்லது தற்காலிகமாக அங்கவீனமுற்ற நிலையில் வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை என்பன புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் இற்றைப்படுத்தப்படும்  என்று தொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply